புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யவோ, அல்லது அது தொடர்பாக பூஜைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ யாரும் முறைப்படி அனுமதி கோரினால் தமிழக அதிகாரிகள் அனுமதிக்க வேண் டும் என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வாய்மொழி உத்தரவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் நேரலை செய்ய அனுமதி கோரி தமிழகத்தைச் சேர்ந்த வினோஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் சிலை பிரதிஷ்டை நிகழ்வு என்பது நாடு முழுவதும் உள்ள இந்து பக்தர்களுக்கு மிகப்பெரிய நிகழ்வு. தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான ஆன்மிக குருமார்கள், பெரியவர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்வில் பெரும்பாலான தமிழக பக்தர்கள் நேரடியாக பங்கேற்க இயலாது என்பதால் ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்வுகளை தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தனியார் மண்டபங்களில் நேரலை செய்யவும், சிறப்பு அன்னதானம் வழங்கவும், பஜனைகள், அர்ச்சனைகள் மற்றும் ஊர்வலம் செல்லவும் திட்டமிடப்பட்டது.
ஆனால் இந்நிகழ்வுக்கு அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் அனுமதி மறுத்து வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்கும் இதுதொடர்பாக வாய்மொழி உத்தரவு தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே ராமர் கோயில் திறப்புவிழா தொடர்பான நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் மண்டபங்களில் நேர லையில் ஒளிபரப்பு செய்யவும், மற்ற நிகழ்வுகளுக்கும் எந்த தடையும் விதிக்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்தவழக்கு அவசர வழக்காக நேற்றுநீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தாம சேஷாத்ரி நாயுடு, பி.வள்ளியப்பன் மற்றும் வழக்கறிஞர் ஜி.பாலாஜி ஆகியோர் ஆஜராகி, நாட்டின் முக்கிய நிகழ்வான ராமர் கோயில்திறப்பு விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனுமதியளிக்கக்கூடாது என தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலை செய்ய அனுமதி வழங்கக்கூடாது என எந்தவொரு தடையுத்தரவையும் தமிழகஅரசு பிறப்பிக்கவில்லை என்றார்.
அப்போது நீதிபதிகள், தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறினால் அதுதொடர்பான ஆவணங்கள் எங்கே என மனுதாரர்கள் தரப்பிடம் கோரினர். அதற்கு மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சில இடங்களில் அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் வாய்மொழியாக அனுமதி மறுத்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தடை விதிக்கப்பட்டதற்கு எந்தவொரு ஆவணங்களும் இல்லை என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், அப்படியென்றால் அவ்வாறு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்த அதிகாரிகளை ஏன் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை. இந்த வழக்கில் எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் எப்படி தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட முடியும், என்றனர்.
பின்னர் நீதிபதிகள், ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யவோ, அல்லது அதுதொடர்பாக பூஜைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ தமிழகத்தில் யாரும் முறைப்படி அனுமதி கோரினால் அதிகாரிகள் அதை சட்டத்துக்குட்பட்டும், முன்மாதிரி தீர்ப்புகளை மனதில் கொண்டும் பரிசீலித்து அனுமதியளிக்க வேண்டும். அதைவிடுத்து வாய்மொழி உத்தரவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய எந்த கட்டாயமுமில்லை. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக கடைபிடிப்பார்கள் என நம்புகிறோம். ஒருவேளைஅனுமதி கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க நேரிட்டால் அதற்கான காரணங்களையும் அதில் தெளிவாக தெரிவிக்க வேண்டும். எத்தனை விண்ணப்பங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது, எத்தனை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரப் பதிவேடுகளையும் முறையாக கையாள வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.