வேலூர்: தமிழகத்தில் காலாவதியான கல்குவாரிகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக நீர்வளம், கனிம வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
வேலூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ‘‘ஆறுகளில் குப்பையை கொட்டினாலும், அல்லது ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. எனவே, ஆறுகளில் குப்பைகளை கொட்டுபவர்கள், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரை முருகன் கூறும் போது, ‘‘தமிழக கோயில்களில் பூஜை செய்யக் கூடாது என தமிழக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் குற்றச்சாட்டை வைத்திருப்பது தவறானது. காலாவதியான கல் குவாரிகள் செயல்பட்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காலாவதியான குவாரிகள் கணக்கெடுக்கும் பணியும் தொடங்கப் பட்டுள்ளன’’ என்றார்.