அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு பாமக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம், முடிவு செய்து அதற்காக மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது. இதற்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகளை அமைக்கக் கூடாது. அரியலூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரியலூர் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ரவிசங்கர் தலைமை வகித்தார். மாநில வன்னியர் சங்கச் செயலாளர் வைத்தி முன்னிலை வகித்தார். மாநில சமூக நீதிப் பேரவைத் தலைவர் பாலு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாமகவினர் வழங்கி சென்றனர்.