சேலம்: சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், கடைசிவரை போராடி மாநில உரிமையை மீட்பது. மகளிர் உரிமைத் திட்டம்,மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, வீடு தேடி மருத்துவம் மற்றும் காலை சிற்றுண்டித் திட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
பொதுப் பட்டியலில் உள்ள மருத்துவம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்வது. ‘நீட்’ தேர்வை முழுமையாக அகற்றும் வரை போராடுவது.
மத்திய அரசின் கைப்பாவையாக மாநிலங்களில் இருக்கும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் நியமனப் பதவியாக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள வேந்தர் பதவியை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மாற்ற வேண்டும்.
மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு யூனியன் பிரதேசமாக மாற்றிய ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
பாஜக ஆட்சியை அகற்ற திமுக இளைஞரணி முன்களப் பணியாளராக செயலாற்றுவது. வரும் மக்களவைத் தேர்தல் மூலமாக பாஜக ஆட்சியை அகற்ற உருவாக்கப்பட்டுள்ள இண்டியா கூட்டணிக்கு முழு அர்ப்பணிப்புடன் இளைஞரணி பணியாற்றுவது உள்ளிட்ட 25 தீர்மானங்களை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாசித்து, அவை நிறைவேற்றப்பட்டன.