சேலம்: சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசியது:
பிரதமர் மோடி இந்துக்களின் பாதுகாவலர் என கூறிக் கொண்டு அவர்களின் மன உணர்வை மதிக்காமல் கட்டி முடிக்கப்படாத கோயிலை திறக்கப் போகிறார். இது இந்து மதத்திற்கும், இந்து மக்களுக்கும் எதிரானது. அரசியல் லாபத்துக்காக அவர்கள் எதையும் செய்வார்கள். இது பற்றி கேட்டால் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறையை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தை எப்போதும் வஞ்சித்து கொண்டே இருக்கிறது. தமிழக மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையிலும், மாநில அரசு கேட்ட வெள்ள நிவாரணத்தை தர மறுக்கிறது. குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது மத்திய அரசு ரூ.ஆயிரம் கோடியை வழங்கியது. ஏன் தமிழகத்தில் இருப்பவர்கள் மக்களாக அவர்களுக்கு தெரிவதில்லையா.
மத்திய குழுவில் இடம் பெற்ற அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து சென்றும், இதுவரை நிவாரணம் வந்து சேரவில்லை. தமிழக மக்கள் பாஜக - வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் நிவாரணத் தொகை தரவில்லை. மக்களவைத் தேர்தலில் இளைஞரணியாகிய உங்களால மாற்றத்தை ஏற்படுத்த முடியும். விரைவில் அந்த மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்பி ஆர்.ராசா பேசியதாவது: பண்டைய இந்தியாவில் இரண்டு விதமான பண்பாடு இருந்துள்ளது. ஒன்று சமஸ்கிருத மொழியை பின்பற்றிய ஆரிய பண்பாடு. மற்றொன்று தமிழ் மொழியை பின்பற்றிய திராவிட பண்பாடு. இதில் பலக்கட்டங்களில் திராவிட பண்பாட்டை அழிக்க முயற்சிகள் நடந்தது. ஆனால், எக்காலத்திலும் தமிழையும், திராவிடத்தையும் எவராலும் அழிக்க முடியாது. அதற்கு சான்றாகத் தான் இந்த இளைஞரணி மாநாடு விளங்குகிறது. உலகில் எந்த மதமும் தேசமாக முடியாது. மொழி தான் தேசியமாக முடியும். தமிழ் மொழியும், தமிழ் தேசியமும் என்றும் வாழும்.
இவ்வாறு பேசினார்.
திருச்சி சிவா எம்பி பேசியது: கடந்த 1980-ல் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது . திருச்சியில் 1982-ம் ஆண்டு இளைஞரணி மாநாடு நடந்தது. அப்போது நான் அங்கு வந்த கூட்டத்தைப் பார்த்து , அணி வகுத்திருந்த இளைஞரணியினரின் தலைகள் அடுக்கி வைக்கப்பட்ட தீக்குச்சிகளாய் உள்ளது. தீக்குச்சியின் தலையை உரசினால் பற்றி எரியும். அதற்கு தான் வீரியம் உண்டு என்றேன். அடுத்து பேசிய திமுக தலைவர் கருணாநிதி, அவரது பாணியில், திமுக என்ற தீப்பெட்டியில் தீக்குச்சிகள் அடங்கியிருக்க வேண்டும். எப்போது தீக்குச்சியை உரச வேண்டுமோ அப்போது உரசு வோம். தேவைப்படும் போது பற்ற வைப்போம், என்றார். இங்கு குழுமியிருக்கும் இளைஞரணி தலையில் புதிய சிந்தனைகள் மூலம் கட்சியை கட்டிக் காக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மாநாடு நிறைவாக சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாண்டி ஆ.பிரபு நன்றி கூறினார்.
மாநாட்டில், சேலம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.ராஜேந்திரன் எம்எல்ஏ (மத்திய) , டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), எம்பி பார்த்திபன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், நகராட்சித் தலைவர் பரிதா நவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டையொட்டி டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் ஏடிஜிபி அருண், சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, சரக டிஐஜி உமா, சேலம் எஸ்பி அருண்கபிலன் உட்பட 19 எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.