சேலம்: சேலத்தில் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டுச் சுடரை ஏற்றி வைத்தார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21)நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து சேலத்துக்கு தனி விமானத்தில் நேற்று வந்தார். அங்கிருந்து கார் மூலமாக மாநாட்டுத் திடலுக்கு வந்த அவருக்கு, வழிநெடுகிலும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டுத் திடலில் கட்சியின்இளைஞரணி மாநிலச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கே.என்.நேருஉள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, திமுக இளைஞரணியினர் சென்னையில் இருந்து கொண்டுவந்த சுடரை உதயநிதி பெற்று, அதை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திமுகவினர் முன்னிலையில், மாநாட்டுத் திடலின் முகப்பில் சுடரை முதல்வர் ஸ்டாலின் ஏற்றிவைத்தார்.
இதனிடையே, ‘நீட்’ விலக்கு கோரி இருசக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் பேரணியாகச் சென்றிருந்த திமுகவினர் 1,500 பேர், மாநாட்டுத் திடலை வந்தடைந்தனர். தொடர்ந்து, முரசொலி புத்தக விற்பனை நிலையம் மற்றும் இளைஞரணி புகைப்படக் கண்காட்சியை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாநாட்டுக்கு வந்திருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்களுக்கு திமுக வரலாற்றை விளக்கும் வகையில், மாநாட்டுத் திடலில் 1,000 ட்ரோன்களைக் கொண்டு கண்கவரும் `ட்ரோன் ஷோ' நடத்தப்பட்டது.
பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது செயல்பாடுகள், திட்டங்கள் குறித்தும், ஸ்டாலின், உதயநிதி மற்றும் கட்சியினரை வரவேற்கும் வகையிலும் ட்ரோன் காட்சி நடத்தப்பட்டது. இவை திமுக தொண்டர்களை உற்சாகமடையச் செய்தது.
இந்த நிகழ்ச்சிகளில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, நிர்வாகிகள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, சேலம் மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி மற்றும் பார்த்திபன் எம்.பி., துர்கா ஸ்டாலின், இன்பநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞரணி மாநாட்டை, கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்றுதொடங்கிவைக்கிறார். மகளிரணிச் செயலாளர் கனிமொழி கட்சிக் கொடியேற்றி வைக்கிறார். தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள5 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து மாற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிபி சங்கர் ஜிவால் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார்.
உரிமை மீட்பு மாநாடு: இதுகுறித்து இளைஞரணிச் செயலாளர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசால் பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ‘நீட்’ தேர்வு காரணமாக தங்கை அனிதா, சேலத்தைச் சேர்ந்த மாணவர்தனுஷ் ஆகியோரை இழந்தோம். மாநாட்டு வாயில்களுக்கு அவர்களது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய,மத்திய பாஜக அரசை அகற்றுவதே தீர்வாக இருக்கும். மாநாடு நிறைவு பெற்றதும், மக்களவைத் தேர்தலுக்கான பணிகள், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி மேற்கொள்ளப்படும்" என்றார்.