தமிழகம்

தமிழகத்தில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை: பேரவையில் சுகாதார அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை என சட்டப்பேரவையில் சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை தெரிவித்தார்.

மேலும், எபோலா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

எபோலா நோய் குறித்து தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் 2000 சிறப்பு தொற்றுநோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்றார்.

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சை என 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விரிவு செய்ய மண்டல உறுப்பு மாற்று சிகிச்சை மையம் அமைக்கப்படும். சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் டிஜிட்டல் எக்ஸ் ரே கருவி பொருத்தப்படும் போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT