தமிழகத்தில் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4- தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 992 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் என்றாலும், பட்டம், முதுநிலை பட்டம், பட்டயம், பொறியியல், எம்.ஃபில், முனைவர் பட்டம் முடித்தவர்களும் உள்ளனர்.
ஆண்டுதோறும் பொறியியல் படித்து, லட்சக்கணக்கானவர்கள் வெளிவருகின்றனர். இவர்கள் எல்லோரும் உடனடியாக பணிவாய்ப்பு பெற்றுவிடுவதில்லை. இதனால்தான் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணயம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு அமைப்புகள் நடத்தும் குறைந்த ஊதியத்தைக் கொண்ட அடிப்படை பணிகளுக்குக்கூட அதிக அளவில் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி இந்த தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. 494 கிராம நிர்வாக அலுவலர், 4,349 இளநிலை உதவியாளர், 230 வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், 3,463 தட்டச்சர், 815 சுருக்கெழுத்து தட்டச்சர் என, 9,351 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.
இப்பணிகளுக்கான குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும். இப்பணிகளுக்காக 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர். இதில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இவர்களுக்கான எழுத்துத்தேர்வு, கடந்த பிப்.11-ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 3 லட்சம் பேர் வரை பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. அடுத்த கட்டமாக, தற்போது விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகள் நடந்து வரும் நிலையில், விண்ணப்பித்தவர்களில் 992 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எம்.ஃபில் முடித்த 23,000 பேர், முதுநிலை பட்டதாரிகள் 2.5 லட்சம் பேர், 8 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். குறைந்த பட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பட்டதாரிகளில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பொறியியல் அல்லாத மற்ற துறை பட்டதாரிகள் என்றும் டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
டிஎன்பிஎஸ்சி தேர்வு மட்டுமின்றி, காவல், தீயணைப்பு, சிறைத்துறையினருக்கு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விலும் முனைவர், எம்பில் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை, அதிக அளவில் இருந்தது. நீதித்துறையில் சமீபத்தில் துப்புரவாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்த சம்பவமும் நடந்தேறியது குறி்ப்பிடத்தக்கது.