மதுரை: தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜில் ஜோன்ஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழக முதல்வர், மூத்த அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பும் கருத்துகளை ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ''கையில் ஒரு செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்து பரப்பிவிட்டு, இப்போது இங்கு வந்து இனிமேல் இதுபோன்ற பதிவுகளை பதிவிடமாட்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் சிறைக்கு செல்ல வேண்டும். முன்ஜாமீன மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.