தென்காசி: செங்கோட்டை நகராட்சித் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்ததீர்மானம் கொண்டுவர மனு அளித்ததிமுக கவுன்சிலர்கள், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளைக் கொண்டது. திமுகவைச் சேர்ந்த ராமலட்சுமி, நகராட்சித் தலைவராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அரசு பணத்தை கையாடல் செய்வதாக நகராட்சித் தலைவர் மீது திமுக உட்பட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
கடந்த மாதம் 18-ம் தேதி அதிமுக கவுன்சிலர்கள் 10 பேர், பாஜக கவுன்சிலர்கள் மூவர்,திமுகவைச் சேர்ந்த 6 கவுன்சிலர்கள் என் மொத்தம் 19 கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி ஆணையர் சுகந்தியிடம் மனு அளித்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கான கூட்டம் ஜன. 18-ம் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று ஆணையர் அறிவித்தார். இதன்படி, நகர்மன்றக் கூட்ட அரங்கில் ஆணையர் சுகந்தி தலைமையில் வாக்கெடுப்புக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, நகராட்சி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர், பாஜக கவுன்சிலர்கள் 3 பேர் கலந்துகொண்டனர். ஆனால் திமுக கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை.
அதிமுக, பாஜக எதிர்ப்பு: போதிய அளவுக்கு கவுன்சிலர்கள் வருகை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்தாக ஆணையர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் கோஷமிட்டபடி வெளியேறினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "மக்களின் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத நகராட்சித் தலைவரைக் கண்டித்துஇந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால், திமுக உறுப்பினர்கள் விலை போய்விட்டனர். நகராட்சித் தலைவருக்கு எதிரான எங்கள் போராட்டம் அறவழியில் நடைபெறும்" என்றனர்.