கோப்புப் படம் 
தமிழகம்

7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு சென்ற சசிகலா: எஸ்டேட் வளாகத்தில் இன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை/உதகை: ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று கோடநாடு எஸ்டேட் சென்றார் சசிகலா. அங்கு இன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்கிறார். மேலும், எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது நிழலாகப் பின்தொடர்ந்தவர் சசிகலா. இருவரும் ஓய்வெடுப்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்பங்களாவுக்கு செல்வது வழக்கம். 2016 சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு இருவரும் கோடநாடு சென்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்றார். இதனிடையே, 2017-ல் கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்டு, கொள்ளை நடைபெற்றது. இந்தவழக்கில் இதுவரை மர்மம் விலகவில்லை. சிறையிலிருந்து விடுதலையான பிறகு கோடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்த சசிகலா, 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜெயலலிதா இல்லாமல், கோடநாடு சென்றார்.

அம்மா தண்டிப்பார்...: சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு நேற்று வந்த சசிகலா, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோடநாடு சென்றார். அவருக்கு எஸ்டேட் ஊழியர்கள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோடநாடு எஸ்டேட்டில் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது: முதன்முறையாக அம்மா இல்லாமல் இங்கே வருகிறேன். அவரது நினைவாகவும், எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களை பார்ப்பதற்காகவும் இங்கு வந்துள்ளேன். இதுபோன்ற சூழல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

எங்கள் தோட்டத்தில் சிறுவயதில் இருந்தே காவலாளியாகப் பணிபுரிந்தவர் உயிரிழந்துள்ளார். அம்மா (ஜெயலலிதா) தெய்வமாக இருந்து, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜெயலலிதாவுக்காக பூஜை செய்ய கோடநாடு வந்துள்ளேன். விரைவில் இங்கு அவரது சிலையை அமைக்க உள்ளோம்.

அதிமுக ஒன்றுபடுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் அந்தப் பணி நல்லபடியாக முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். அதுதான் அரசியலுக்கு நல்லது. அந்த மாதிரியான சூழ்நிலை வரும்போது, நிச்சயம் இணைப்பு நிறைவேறும். இவ்வாறு சசிகலா கூறினார்.

ஜெயலலிதா சிலை: கோடநாடு எஸ்டேட்டில் நேற்று இரவு தங்கிய சசிகலா, இன்று காலை நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார். கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலையுடன் கூடிய நினைவிடம் மற்றும் தியான மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பின்னர், சாலை மார்க்கமாக நாளை தஞ்சாவூர் புறப்பட்டுச் செல்கிறார்.

SCROLL FOR NEXT