உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொலைதூர அரசு பேருந்துகள் மற்றும் கிராமப்புற பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, முறையான இயக்கம் கண்டறியப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழக உதகை மண்டல கட்டுப்பாட்டில் உதகை, குனனூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம் கிளை-2 ஆகிய பணி மனைகள் உள்ளன. இங்கிருந்து கிராமப் புறங்களுக்கு மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலம் என 270 வழித்தடங்களில் 335 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலமாக, மாவட்டத்திலுள்ள கிராமங்கள், உள்ளூர் நகர பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுவது குறித்து நிர்வாகம் அறிந்து கொள்ள முடியும். அதில், ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உடனடியாக மாற்றங்களையும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உதவி பொது மேலாளர் முத்து கிருஷ்ணன் கூறும் போது, “உதகையிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப் படும் தொலைதூர அரசு பேருந்துகள், நகர பேருந்துகளில் கடந்த ஒரு மாதமாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, அதன் முறையான இயக்கம் கண்டறியப்பட்டு வருகிறது.
ஜி.பி.எஸ். கருவி வாயிலாக பேருந்துகளின் வழித் தட இயக்கம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள முடிவதுடன், வரையறுக்கப் பட்ட வழித் தடம் மாறி இயக்கப் படுவதையும் கண்டறியலாம். அதே போல், வரையறுக்கப் பட்ட பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதும் உறுதி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 270 பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பேருந்துகளில் படிப்படியாக பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.