வேலூர்: வேலூர் அடுத்த கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் தடையை மீறி எருதுவிடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தடையை மீறி எருது விடும் விழா நடத்தியது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி எருது விடும் திருவிழா நடத்த 55 கிராமங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, முன் அனுமதி அளிக்கப்பட்ட கிராமங்களில் விழாக் குழுவினர் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், விழாக் குழுவினர் ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்புபலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காப்பீடு செய்து விண்ணப் பித்தால் மட்டுமே விழா நடைபெறுவதற்கான முறையான அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காரணம், ஒரு நாள் விழாவுக்காக ரூ.1 கோடி அளவுக்கு காப்பீடு செய்ய ரூ.4 லட்சம் வரை காப்பீட்டு தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால், பல இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதியின்றி எருதுவிடும் விழாக்கள் நடத்த தயாராகி வருகின்றனர். அதே நேரம், கடந்தாண்டு நடைபெற்ற எருது விடும் விழாக்களில் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக்கூறி கே.வி.குப்பம் வட்டம் கீழ்முட்டுக்கூர், வேலூர் வட்டம் ஆற்காட்டான் குடிசை, மேட்டு இடையம்பட்டி, அணைக் கட்டு வட்டம் மருதவள்ளி பாளையம், கோவிந்த ரெட்டிபாளையம் ஆகிய 5 கிராமங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எருது விடும் விழாக்கள் நடத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
அதாவது, இந்தாண்டு ( 2024 ) தொடங்கி வரும் 2026-ம் ஆண்டு வரை எருது விடும் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் தடையை மீறி எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. நேற்று காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெற்ற விழாவில் சுமார் 90-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சீறிப்பாய்ந்து ஓடிய எருதுகளை காண ஆயிரக் கணக்கானவர்கள் திரண்டிருந்தனர். அப்போது, சீறிப்பாய்ந்து ஓடிய எருதுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள், உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ஊசூர் பகுதியைச் சேர்ந்த கோபி ( 28 ) என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், மாவட்ட ஆட்சியரின் தடையை மீறி கோவிந்த ரெட்டிபாளையத்தில் எருது விடும் விழா நடத்தப்பட்டது குறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தடையை மீறி எருது விடும் விழா நடத்தியது தொடர்பாக விழாக்குழுவினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.