அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி. 
தமிழகம்

அலங்காநல்லூரில் பங்கேற்க இயலாத காளைகளுக்கு கீழக்கரை அரங்கில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை!

என். சன்னாசி

மதுரை: அலங்காநல்லூர் வாடிவாசலில் அவிழ்க்க முடியாத காளைகளுக்கு கீழக்கரை அரங்கில் நடக்கும் ஜல்லிக்கட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என காளையை அவிழ்க்க முடியாத வினோத் கோரிக்கை விடுத்தார்.

மதுரை மாவட்டம், புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று சிறப்பாக நடந்தது. போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் தங்களது காளைகளை ஆன்லைனில் பதிவு செய்தனர். 1200 காளைகள் மட்டுமே அவிழ்க்க முடியும் என, திட்டமிட்டு அதற்கான டோக்கன்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்தனர். திட்டமிட்டபடி, போட்டி காலை 7 மணிக்கு தொடங்கினாலும், பிறவாடி பகுதியில் வரிசையில் நின்ற ஓரிரு காளைகள் படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தல் போன்ற சில காரணத்தால் சற்று தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு மணி நேரம் கூடுதலாக அனுமதித்த நிலையிலும், 810 காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டன. எஞ்சிய 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்க முடியவில்லை. ஆறுதல் பரிசுகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி உள்ளிட்ட சில வெகுதூர ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்களது காளைகளை அலங்காநல்லூர் வாடியில் திறக்க முடிய வில்லையே என உரிமையாளர்கள் ஆதங்கம் அடைந்தனர்.

திருச்சி லால்குடி ஜல்லிக்கட்டு ஆர்வலர் வினோத்

இது குறித்து திருச்சி லால்குடி ஜல்லிக்கட்டு ஆர்வலர் வினோத் என்பவர் கூறுகையில், ''அலங்காநல்லூரில் 1200 காளைகளுக்கு டோக்கன் அனுமதிக்கப்பட்டாலும், 810 காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டன. புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கென தொடர்ந்து வளர்க்கப்பட்டு, தயார்படுத்திக் கொண்டு வந்த என்னைப் போன்ற 400-க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்க்க, வாய்ப்பு கிடைக்கவில்லை.

காளைகள் பங்கேற்பு ஆன்லைன் டோக்கன் பதிவு நல்லது என்றாலும், அனுமதிக்கும் அனைத்து காளைகளும் அவிழ்க்க வாய்ப்பளிக்கவேண்டும். மதுரை கீழக்கரையில் திறக்கப்படும் ஜல்லிக்கட்டு அரங்கில் நடக்கும் போட்டியில் அலங்காநல்லூரில் அவிழ்க்க முடியாத காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT