ஸ்ரீநிதா 
தமிழகம்

“பிரதமரிடம் வாழ்த்து பெற்றது வாழ்நாள் பாக்கியம்” - மேட்டுப்பாளையம் சிறுமி நெகிழ்ச்சி

டி.ஜி.ரகுபதி

கோவை: டெல்லியில் நடந்த நிகழ்வில் பிரதமரிடம் வாழ்த்தும் பரிசும் பெற்றதை வாழ்நாள் பாக்கியமாக கருதுவதாக கோவை சிறுமி தெரிவித்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்களான மகேந்திரன் - அழகு கோமதி தம்பதியின் இரண்டாவது மகள் ஸ்ரீநிதா ( 13 ). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நான்காவது வயது முதல் முறைப்படி சங்கீதம் பயின்று வருவதோடு, பல்வேறு மேடைகளில் பாடல்கள் பாடி தனித் திறமை மூலம் பரிசுகளை வென்றுள்ளார். ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக் காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச் சென்றார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த சிறுமி ஸ்ரீநிதா பிரதமர் முன்னிலையில் ‘சத்தியம் சிவம் சுந்தரம்’ என்ற பாடலை இனிமையாக பாடி அசத்தினார். ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர் மோடி, ஸ்ரீநிதாவிடம் ‘மிக அருமையாக பாடினாய், மனமார்ந்த வாழ்த்துகள்’ என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.

இது குறித்து ஸ்ரீநிதாவிடம் கேட்டபோது, “நான் டெல்லி சென்று பிரதமர் முன்னிலையில் பாட கிடைத்த வாய்ப்பு மற்றும் பிரதமரிடம் பாராட்டும் பரிசும் பெற்றது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்” என்றார்.

SCROLL FOR NEXT