கடலூர் மாவட்டம் வேப்பூரில் மேம்பாலப் பணியால் சர்வீஸ் சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். 
தமிழகம்

முடங்கிப்போன பாலப் பணியால் வேப்பூரில் வாகன ஓட்டிகள் அவதி

ந.முருகவேல்

விருத்தாசலம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முடங்கிப் போன மேம்பாலப் பணியால் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர் சென்று திரும்பும் தென் மாவட்ட மக்கள் வேப்பூர் பகுதியில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரில் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்படவேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்தனர். இதை பரிசீலித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.8.46 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் கூட்டு ரோடு முதல் சிறு நெசலூர் பாலம் வரை 1.25 கி.மீ நீளத்துக்கு பாலம் கட்ட முடிவு செய்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த2019-ஜூலை 31-ம் தேதி நடத்தியது.

இருப்பினும், இந்தப் பாலத்தில் வாகன வசதிக் கேற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என கதிர்வேல் என்பவர் பொது நல வழக்குத் தொடுத்த நிலையில், வழக்கை காரணம் காட்டி அப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் சென்னை - திருச்சி இடையே பயணிக்கும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பண்டிகைக் காலங்களிலும், தொடர் விடுமுறை காலங்களிலும் சொந்த ஊர் சென்று திரும்பும் தென் மாவட்ட மக்கள், வேப்பூர் பகுதியில் இந்த சர்வீஸ் சாலையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

விடுமுறை நாட்களில் அதிக வாகனங்கள் பயணிப்பதால் போக்குவரத்து தடை எற்பட்டு வேப்பூரைக் கடந்து செல்ல அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் வேப்பூர் போலீஸாரும் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதேபோன்று இச்சாலை மார்க்கத்தில் விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலப்பணி, மயிலம் கூட்டுரோடு மேம்பாலப் பணிகளாலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இந்த நெருக்கடிகளால் சென்னை - திருச்சி இடையேயான பயணம் 6 மணி நேரம் என்பது, 10 மணி நேரமாக அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே டோல் கேட் கட்டணம் உள்ளிட்ட நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த போக்குவரத்து நெருக்கடியால் எரி பொருள் விரையம் உள்ளிட்ட செலவினங்கள் கூடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பொங்கல் விடுமுறை முடிந்த சூழலில், நேற்று சொந்த ஊருக்குத் திரும்புவோர் வேப்பூர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, திக்கித் திணறி சென்றதை பார்க்க முடிந்தது. நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உடனடியாக வாகன ஓட்டிகளின் சிரமத்தை உணர்ந்து, இந்தப்பகுதியில் நிலவும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

SCROLL FOR NEXT