திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்ய ஜன.20-ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோயிலை சுற்றியுள்ள வீடுகளில் வசிப்போர் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி நாளை ( ஜன.19 ) தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். மறு நாள், ஜன.20-ம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் முற்பகல் 11 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலுக்கு செல்லும் பிரதமர், பிற்பகல் 12.40 மணி வரை கோயிலில் உள்ள பல்வேறு சந்நிதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். அதைத் தொடர்ந்து, திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேசுவரம் புறப்படும் பிரதமர் மோடி, பிற்பகல் 2.10 மணிக்கு ராமநாதசாமி கோயிலை அடைகிறார்.
பிற்பகல் 2.45 முதல் 3.30 மணி வரை அங்கு தரிசனம் செய்யும் அவர், இரவு ராமேசுவரத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறு நாள் ஜன.21-ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று விமானம் மூலம் அயோத்தி செல்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் கும்பா பிஷேகத்தையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேசுவரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: பிரதமர் மோடி திருச்சி வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் என்.காமினி தலைமையில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை ( எஸ்பிஜி ) ஐ.ஜி லவ்குமார் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல ஸ்ரீரங்கம் கோயிலிலும், பாதுகாப்புப் படையினர், கோயில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், கோயில் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீரங்கம் கோயில் அருகில் வசிப்பவர்களின் விவரங்கள் குறித்து, போலீஸார் வீடு தோறும் சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனர். பிரதமர் வருகையை யொட்டி, ஸ்ரீரங்கம் முழுவதும் போலீஸாரின் தீவிர பாதுகாப்பு வளையத்தில் வந்துள்ளது. பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்புக் கருதி திருச்சியில் நேற்று ( ஜன.17 ) முதல் 20-ம் தேதி வரை ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
2-வது முறையாக மோடி வருகை: திருச்சி பாஜகவினர் உற்சாகம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜன.2-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து இந்த மாதத்தில் 2-வது முறையாக மோடி ஜன.20-ம் தேதி திருச்சி வருகிறார். இதனால் திருச்சி பாஜக-வினர் உற்சாகமடைந்துள்ளனர்.