கோவில்பட்டி: மழை நின்று ஒரு மாதமாகியும் கோவில்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொது மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் கோவில்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதை, கிருஷ்ணா நகரில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதை ஆகியவற்றை அதிகளவு மக்கள் பயன்படுத்து கின்றனர்.
கிருஷ்ணா நகர் சுரங்கப் பாதை வழியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம், சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில், கிருஷ்ணா நகர், மந்தித் தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மழை நின்று ஒரு மாதமாகியும் இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகரில் உள்ள சுரங்கப் பாதையில் தண்ணீர் வடியவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே துறைக்கு புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் தா.வெங்கடேசன் கூறியதாவது: கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்துக்கு மனு அனுப்பினேன். அவர்கள் அந்த மனுவை மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்துக்கு அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அங்கிருந்து பொறியாளர் பிரிவைச் சேர்ந்த அதிகாரி நாராயணன் வந்து சுரங்கப் பாதையை பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் எனக்கு அனுப்பி உள்ள பதிலில், ‘‘நாங்கள் கிருஷ்ணா நகர் ரயில்வே சுரங்கப்பாதையை ஆய்வு செய்தோம். அங்கு தண்ணீர் எதுவும் தேங்கவில்லை. உங்கள் பரிந்துரைகள் முன்னேற்றப் பணிகளுடன் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். நான் கடந்த 3-ம் தேதி மனு அனுப்பினேன். அவர்கள் 10-ம் தேதி எனக்கு பதில் அனுப்பி உள்ளனர். ஆனால், சுரங்கப்பாதையில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஏற்கெனவே, மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க இனாம் மணியாச்சி நிர்வாகம் சார்பில் இரு முறை தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் செலவு செய்து, சுரங்கப்பாதையில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது. ஆனால், இதுபற்றி எல்லாம் தெரியாமல் ரயில்வே அதிகாரிகள் பதில் அளித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க அங்கு தானியங்கி மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.