சென்னை: மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்முகத் தேர்வில் பங்கேற்க கேங்மேன் பணியாளர்களுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பணியாளர் நலன் பிரிவு தலைமைப்பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கான உள்முகத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இத்தேர்வில் எங்களது சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் இடைக்கால உத்தரவை வழங்க வேண்டும்" என கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: தொழில்நுட்பஉதவியாளர் பணிக்கான உள்முகத் தேர்வில் பங்கேற்க மனுதாரர் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்குமாறு மின்வாரிய பணியாளர் நலன் பிரிவு தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிடப்படுகிறது.