உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவர் முருகேசனுடன் தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றியக் கவுன்சிலர் தமிழ்ச்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பெண் காவலர். 
தமிழகம்

உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி நாமக்கல்லில் கணவருடன் திமுக கவுன்சிலர் தர்ணா

செய்திப்பிரிவு

நாமக்கல்: உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது கணவருடன் திமுக ஒன்றிய கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்செங்கோடு அருகே மல்ல சமுத்திரத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வி. திமுகவைச் சேர்ந்த இவர் மல்ல சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் முருகேசன். இவர் டேங்கர் லாரித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு முருகேசன் - தமிழ்ச் செல்வி தம்பதி தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த நல்லிபாளையம் போலீஸார், தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “தனது கணவருடன் கூட்டுச் சேர்ந்து டேங்கர் லாரி தொழிலில் ஈடுபடும் நபரால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்றனர்.

பின்னர் இருவரையும் சமரசம் செய்த போலீஸார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதையேற்று, இருவரும் தர்ணாவைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT