தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த வாகனங்கள். 
தமிழகம்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல்

செய்திப்பிரிவு

தாம்பரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் பெருமளவு செல்வதால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பொது மக்கள் செல்கின்றனர். இதனால் ஜிஎஸ்டி. ( கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை ) சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பூங்கா, கூடுவாஞ்சேரி, சிங்க பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் நெரிசல் அதிகம் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல்வேறு பகுதிகளிலும் போக்கு வரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீஸார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, நேற்று முன்தினமும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

SCROLL FOR NEXT