உத்தமபாளையம்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரைக்காக இந்த ஆண்டு கொக்குகளின் வருகை அதிகரித்துள்ளது. வயல்களில் இவை கூட்டமாக வந்து அமர்வதால் நெல் நாற்றுக்கள் சாய்ந்து விடுகின்றன. ஆகவே வெள்ளைக் கொடிகளை கட்டியும், பட்டாசுகளை வெடித்தும் இவற்றை விரட்டி தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் அளவிற்கு இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணை மூலம் போதுமான நீர்வளம் இருப்பதால் இப்பகுதியில் நெல் மட்டுமல்லாது கரும்பு, வாழை, பூ, தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.இதனால் ஆண்டு முழுவதும் விவசாயப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். தற்போது இரண்டாம் போக சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நிலத்தை உழுது பண்படுத்தி வருவதுடன், நாற்றாங்கல் பாவி, நெல் நாற்றுக்களையும் நடவு செய்து வருகின்றனர்.
இப்பருவத்தில் வயலில் உள்ள புழு, பூச்சிக்களை உணவாக்க கொக்கு, நீர் காக்கை உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் அதிகளவில் வரும். இந்த ஆண்டு கொக்குகள் அதிகளவில் வந்துள்ளன. இரையும், தங்க அடர்த்தியான மரங்களும் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள கொக்குகள் இங்கு வாரக்கணக்கில் முகாமிட்டுள்ளன. உழுது கொண்டிருக்கும் அல்லது உழுத வயல்களில் இரை தேடுகையில் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால் நாற்று நட்ட வயல்களில் இவை மொத்தமாக வந்து அமர்வதால் நெல்நாற்றுக்கள் சாய்ந்து அதன் வளர்ச்சி பாதிப்படைகிறது. ஆகவே கொக்குகளின் வருகையை கட்டுப்படுத்த வயல்களில் பல பகுதிகளில் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.
இது காற்றில் அசைந்து ஆடுகையில் கொக்குகள் இந்த வயல்களுக்கு வருவது ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும் கொக்குகளினால் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் களைய பட்டாசு வெடித்து அவற்றை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கூலிக்கு ஒரு ஆளை நியமித்து பட்டாசு வெடிக்கின்றனர். இந்த சத்தத்துக்குப் பயந்து அவை அருகில் உள்ள வயல்களுக்கு பறந்து சென்று விடுகின்றன. இதனால் தீபாவளி போல உத்தமபாளையம் வயல் பகுதிகளில் பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "இந்த ஆண்டு கொக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உழும்போது இரைக்காக வரும் கொக்குகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் நாற்று நட்ட பிறகு இரைக்காக வயல்களில் கூட்டமாக வந்து நிற்பதால் செடிகள் சாய்ந்து விடுகின்றன.
இவற்றை விரட்டுவதற்காக வெள்ளை உரச்சாக்கு, துணி, பிளாஸ்டி கை போன்றவற்றை வயல் ஓரங்களில் கட்டி பறக்க விட்டுள்ளோம். இதன் அசைவுகளைப் பார்த்து கொக்குகளின் வருகை குறைந்துவிடும். இருப்பினும் பட்டாசு வெடித்தும் இவற்றை அவ்வப்போது விரட்டி வருகிறோம்" என்றனர்.