பெரியார் பல்கலை.யில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன். படம்: எஸ். குரு பிரசாத் 
தமிழகம்

பெரியார் பல்கலை. நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதற்கிடையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற திமுகவினர் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்கள் நிறுவனம் தொடங்கி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி நேற்று பல்கலை.க்குவந்தார். துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் அவர் கோவைக்கு கார் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

150 பேர் கைது: முன்னதாக, ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று காலை பல்கலைக்கழகம் முன் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் கழகம் மற்றும் மாணவர் அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் திரண்டனர். மேலும், ஆளுநரையும், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் கண்டித்து அவர்கள் கோஷமெழுப்பினர்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான போலீஸார், ஆளுநர் வருவதற்கு முன்னதாகவே, பல்கலை. முன் திரண்டிருந்த திமுகவினர் உள்ளிட்ட150 பேரைக் கைது செய்தனர். ஆளுநர் புறப்பட்டுச் சென்ற பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

போலீஸ் சோதனை: இதற்கிடையில், காவல் ஆய்வாளர்கள் சாரதா, பால்ராஜ், செல்வி, சிவகாமி, சிவக்குமார், சசிகலா தலைமையிலான போலீஸார், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் அலுவலகம் உள்ளிட்ட 6 அலுவலகங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

துணைவேந்தர் உள்ளிட்டோர் மீதான வழக்கு சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் தொடர்பாக சோதனையில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் பல்கலைக்கழகத்தில் இருந்த நிலையில், மற்றொரு பகுதியில் போலீஸார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT