திருவாரூர்: நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் மூச்சுத் திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நாகை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் எம்.செல்வராஜ்(67). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் உள்ள இவர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள சித்தமல்லியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வராஜுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.