தமிழகம்

சீசன் டிக்கெட்டுக்கு உறுதி மொழிப் படிவம்: ரயில் பயணிகள் கடும் அதிருப்தி

செய்திப்பிரிவு

ரயில் சீசன் டிக்கெட் எடுக்கும் பயணிகளிடம் உறுதிமொழிப் படிவம் பெறும் முறையை ரயில்வே நிர்வாகம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சலுகைக் கட்டணத்தில் மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீசன் டிக்கெட் எடுக்க வரும் பயணிகளிடம் உறுதி மொழிப் படிவம் பெறும் புதிய முறையை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மண்டல ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரயில்வே நிர்வாகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள உறுதி மொழிப் படிவத்தில் சீசன் டிக்கெட் எடுக்கும் பயணியின் பெயர், வீட்டு முகவரி, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகல், பயணம் செய்வதற்கான காரணம் ஆகிய விவரங்களை கேட்டுள்ளது. மேலும் சட்டத்துக்கு புறம்பாக செயல்களில் ஈடுபடமாட்டேன் என உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால், குறிப்பிட்ட பயணிக்கு மீண்டும் சீசன் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உறுதி மொழி படிவத்தை பயணிகள் மாதந்தோறும் சீசன் டிக்கெட் எடுக்கச் செல்லும் போது அளிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை பயணிகளுக்கு மட்டுமின்றி டிக்கெட் வழங்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் மிகுந்த பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் பயணிகள் ரயில்களை தவறவிடும் நிலை உள்ளது.

இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயணிகள் மட்டுமின்றி எங்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினைக்கு ரயில்வே நிர்வாகம்தான் தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT