திருப்பூர்: திருப்பூரில் அமையவுள்ள புற்றுநோய் மருத்துவமனை இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக அமையும் என கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ‘நமக்கு நாமே திட்டத்தின்’ கீழ் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புற்று நோய் மருத்துவமனை கட்டுமானப் பணிகளின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர், திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் ஏ.முருக நாதன், பியோ தலைவரும், ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவத் தலைவருமான ஏ.சக்தி வேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் அமைச்சர் மு.பெ.சாமி நாதன் பேசியதாவது: "இந்திய அளவில் ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக இந்த புற்று நோய் மருத்துவமனை அமைய உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், திருப்பூரில் தங்கி பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இந்த மருத்துவமனை பயன்படும். கதிர்வீச்சு புற்று நோயியல் பிரிவு, ஐஜிஆர்டி, உள் கதிர்வீச்சு மருத்துவம், மருத்துவ புற்று நோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்று நோயியல் பிரிவு, அணு மருத்துவம் முழு உடல் பெட் சிடி ஸ்கேன்,
இருதய மருத்துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.60 கோடி நிதியுதவி அளித்த முதல்வருக்கு திருப்பூர் மக்கள் சார்பாக, எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது சொந்த செலவில் ரூ.25 லட்சத் துக்கான காசோலையை மருத்துவமனைக்காக வழங்கியுள்ளேன், என்றார்.
திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் ஏ. முருக நாதன் பேசியதாவது: திருப்பூரில் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை வழங்கக் கூடிய வகையில் அதிநவீன கதிர்வீச்சு வழங்கும் கருவி, ரோபோடிக் சர்ஜரி உள்ளிட்ட அனைத்து வகையான கருவிகளையும் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இதற்கான இயந்திரங்கள் அமெரிக்காவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள் நிறைவடைவதற்குள் அந்த இயந்திரங்கள், இங்கு வந்தடையும். புற்று நோய்க்கு மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு என 3 விதங்கள் உண்டு. இவை அனைத்துக்கும் இங்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு முன்பாகவே, தற்போது 150 பேர் வரை முதல்கட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசுக்கு பொது மக்கள் வழங்க வேண்டிய ரூ.30 கோடியில், இதுவரை ரூ.17 கோடி வசூலாகி உள்ளது. தொடர்ந்து நன்கொடை வழங்க விரும்புவோர் வழங்கலாம், என்றார்.
நிகழ்வில் 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், வெற்றி அறக்கட்டளை தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சிவராம் உட்பட பலர் பங்கேற்றனர்.