சென்னை: நங்கநல்லூர் பகுதியில் மாடு மிதித்ததில் முன்னாள் அஞ்சல் ஊழியர் உயிரிழந்தார். நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அஞ்சல் ஊழியர் சந்திரசேகர் (61). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் எம்ஜிஆர் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக 2 எருமை மாடுகள் ஓடியுள்ளன. அதைப் பார்த்து பயந்து கீழே விழுந்த அவர் மீது,ஒரு மாடு மிதித்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், சாலையில் சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, மாநகராட்சி மாட்டு தொழுவங்களில் அடைக்கப்பட்டன. மாநகரின் பிற பகுதிகளில் 14 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. நங்கநல்லூரில் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலையில் சுற்றும் மாடுகள் பிடிபட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் பராமரிக்க நாளொன்றுக்கு ரூ.200 வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் முதல்முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரம், 2-வது முறை பிடிப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 3-வது நாள் முதல் நாளொன்றுக்கு பராமரிப்பு கட்டணம் ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னாள் அஞ்சல் ஊழியர் உயிரிழப்பு விவகாரத்தில் மாநகராட்சி சார்பில் பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர் மீதுகடும் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நங்கநல்லூரில் மட்டும் சுமார் 200 மாடுகள் தெருக்களில் சுற்றுகின்றன. மாநகர் முழுவதும் 2 ஆயிரத்து 48 மாடுகள் சாலைகளில் சுற்றுகின்றன. இந்த மாடுகளை பராமரிக்க மாற்று இடங்களை வழங்குவதில் சிரமம் உள்ளது. அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் போதிய இடம் இன்றி, தெருக்களை நம்பி மாடுகளை வளர்ப்பது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.