தமிழகம்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: ரவுடியை காவலில் எடுத்து விசாரிக்கும் என்ஐஏ மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) என்ற ரவுடியை கிண்டி போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பான நிலையில்,இந்த வழக்கு விசாரணையில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு போலீஸார் இறங்கினர். இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சேகரிக்கப்பட்டிருந்த அத்தனை தகவல்களையும் கிண்டி போலீஸார்என்ஐஏவிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டஇடத்துக்கு நேரில் சென்று கள விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், அந்நேரத்தில் ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடமும் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் அடுத்த கட்டநகர்வாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ளதேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்த நிலையில் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் கருக்கா வினோத்தை ஆஜர்படுத்தினார்கள்.

போலீஸ் காவல் மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன் அதைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு கருக்கா வினோத்தை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT