மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழைக்கு 18 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம், ஆத்துக்குடி, மயிலாடு துறை வட்டம் சோழன் பேட்டை ஆகிய கிராமங்களில் அண்மையில் பெய்த கன மழை காரணமாக நீர்சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டத்தில் கடந்த 7, 8-ம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக, 1.70 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில், அறுவடைக்கு தயாராக இருந்த 18 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, 1,000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்து ஒரு வாரமே ஆன நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நிறைவு பெற்றவுடன், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.