திருச்சி / அரியலூர்: திருச்சி காஜாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அணி ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: "அதிமுகவை குள்ள நரி கூட்டம் அபகரித்துக் கொண்டுள்ளது. அதை மீட்டெடுக்கும் தர்ம யுத்தத்தை இப்போது தொடங்கியுள்ளோம். அதிமுக 2, 3 ஆக பிரிந்து இருக்க காரணம் பழனிசாமி தான். அவர் தாமாக முன்வந்து பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் அவரை ராஜினாமா செய்ய வைப்பார்கள். அதிமுகவில் அனைவரும் இணைந்து போட்டியிட்டால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை நான், சசிகலா, டி.டி.வி.தினகரன் கூறுகிறோம்.
ஆனால் இபிஎஸ் இதற்கு மறுக்கிறார். வரும் தேர்தலில் நம்முடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் முன் வந்துள்ளன. தனி கட்சி தொடங்கப்போவது இல்லை. தற்போது வந்துள்ள தீர்ப்புகள் தற்காலிகம் தான். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தவறு செய்தவர்களுக்கு இதுவரை தண்டனை கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி வைத்துள்ளன. பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பி விட்டு மற்ற அனைவரும் ஒன்று சேரும் காலம் கனிந்து வருகிறது." இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது: பழனிசாமி தரப்பிலிருந்து எங்களிடம் மறைமுகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி வெளியில் சொல்ல முடியும். இண்டியா கூட்டணி என்பது ஆண்டிகள் கூடிய மடம் என்றார்.
முன்னதாக அரியலூரில் நடைபெற்ற அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியது: பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதாலேயே அவர்களுக்கு எங்களது ஆதரவை அளித்துள்ளோம். திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதன் விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் தெரியவரும் என்றார்.