நாமக்கல்: “இந்தியாவின் பிரதமரை தேர்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். மேலும், ஆட்சி செய்த அதிமுக, ஆளும் திமுகவுக்கும் மாற்றாக அமமுகதான் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
நாமக்கல் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.சண்முகவேலு தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றுப் பேசியது: ''ஆர்கே நகர் தொகுதியில் நாம் வெற்றி பெற்றாலும் அதற்கு பின்னர் வந்த சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் நம்மால் முத்திரைப் பதிக்க முடியவில்லை. எனினும், தொடர்ந்து லட்சியத்தை அடைய என்னோடு லட்சக்கணக்கான கட்சி தொண்டர்கள் பயணிக்கின்றனர். ஆளும் திமுக ஆட்சியாக இருந்தாலும், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியாக இருந்தாலும் மக்கள் அவதிக்குள்ளாகிதான் வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீது கோபமடைந்த மக்கள் திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால், தேர்தலின்போது அளித்தபோது வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற முடியாத ஆட்சியாக திமுக அரசு உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதது கண்டிக்கத்தக்கது. தேர்தலில் 500-க்கும் அதிமான வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. எனவே, ஆட்சி செய்த அதிமுக, ஆளும் திமுகவுக்கும் மாற்றாக அமமுகதான் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பர். அமமுகதான் வரும் காலத்தில் மாற்று சக்தியாக இருக்கும். நாடாமன்றத் தேர்தலில் வெற்றி பெற இப்போதிருந்தே பணியை தொடங்க வேண்டும். திமுக, அதிமுகவுக்கும் எந்த வித்திலும் சளைக்காத கட்சியாக அமமுக வளர்ந்து வருகிறது'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''சொத்து வரி உயர்வு, மின் கட்டண வரி உயர்வு என வரிச் சுமைகளை ஏற்றுகிற அரசாக உள்ளது. திராவிட மக்களை வஞ்சிக்கிற மாடலாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவதே அமமுகவின் கொள்கை. கொடநாடு கொள்ளை வழக்கில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. எனினும், காவல் துறையினர் அந்த வழக்கில் தொடர்புடையர்களை கைது செய்ய முனைப்புடன் செயல்படுகின்றனர். வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வது தான் எங்களின் விருப்பம். இந்தியாவின் பிரதமரை தேர்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும்'' என்றார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் ஏ.பி.பழனிவேலு, எம்.முத்துசரவணன், கே.பி.நல்லியப்பன், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.என்.தங்கவேல் ஆகியோர் வரவேற்றனர். கட்சியின் நாமக்கல், கரூர் மேற்கு மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.