சென்னை: பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை வளர்ச்சி கழகம் சார்பிலான 10-வது உலகத் தமிழர்பொருளாதார மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கிண்டியில்உள்ள ஒட்டல் லீ ராயல் மெரிடியனில் நேற்று நடைபெற்றது. இதற்கு சென்னை வளர்ச்சி கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்தலைமையும், மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் முன்னிலையும் வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன், குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பேராசியர் எம்.முத்துவேலு மற்றும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியின் வாழ்த்து கடிதத்தை முனைவர் ரவி குணவதி மைந்தன் ஆகியோர் படித்தனர்.
இந்த மாநாட்டில் முதல் நாளில் மொத்தம் 5 கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற்றன. இதில் உலகம் முழுவதும் இருந்து வணிகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்,கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போதைய உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள்-சவால்கள், சிறு, குறுதொழில்களில் புதுமையான திட்டங்கள் மற்றும் புத்தாக்க தொழில்கள், சமூக மேம்பாடு, வணிக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்காக தொழில் முனைவோர்களுடன் பணிகளை பகிர்ந்து கொள்ளுதல், உலகளாவிய கூட்டுறவை ஏற்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்கள் இந்த அமர்வுகளில் நடத்தப்பட்டன.
முன்னதாக தொடக்க விழாவில் மொரிசியஸ் நாட்டு முன்னாள் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதி, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், முன்னாள் திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், தொழிலதிபர் பழனி பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடைசி நாளான இன்று (ஜன.10) நடைபெறும் மாநாட்டில் மொத்தம் 7 அமர்வுகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசவுள்ளனர். நிகழ்ச்சியின் நிறைவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 13 முக்கிய ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.