மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதனுடன் கட்டிய கேன்டீன் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. நூலகர்கள், மாணவர்கள், டீ குடிக்க, சாப்பிட 2 கிலோ மீட்டர் செல்லும் நிலை உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து மக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
2 லட்சத்து13 ஆயிரத்து 338 சதுர அடியில் தரைதளம் உள்பட 7 தளங்களுடன் அரை வட்டவடிவில் வானவில் போல், முகப்பு தோற்றத்துடன் இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிவப்பு நிற செங்கல்கள், கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓடுகள், ஜெர்மன் கண்ணா சுவர் பூச்சி போன்றவை கொண்டு இந்த நூலகம் கட்டப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சட்டத்தேர்வுகள், மருத்துவுத் தேர்வுகள் உள்பட அனைத்து துறை வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கான நூல்கள், பள்ளி, கல்லூரி, ஆய்வுப் படிப்புகளுக்கான புத்தங்கங்கள் உள்பட மொத்தம் நான்கரை லட்சம் புத்தகங்கள் உள்ளன.
நூலகம் கட்டி திறக்கப்பட்டபோது ஒரே வாரத்தில் சுற்றுலாத் தலம் போல் ஒரே வாரத்தி்ல் ஒன்றரை லட்சம் பேர் இந்த நூலகத்தை பார்வையிட்டு செல்கிறார்கள். தற்போது புத்தக வாசிப்பாளர்கள், வேலை வாய்ப்புக்காக தயாராகும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என 2 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு இந்த நூலகத்திற்கு வந்து செல்கிறார்கள். இந்த நூலகத்தில் 30 நூலகர்கள், 30 அவுட் சோர்ஸிங் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால், நூலகர்கள், வாசகர்கள், மாணவர்கள் சாப்பிடுவதற்கு, டீ குடிப்பதற்கு ஒரு கேன்டீன் இல்லை. அவசரத்திற்கு ஒரு குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை. கலைஞர் நூலகம் அமைந்துள்ள பகுதியில் அரசு அலுவலக கட்டிடங்கள்தான் உள்ளன.
ஹோட்டல்கள், டீ கடைகள், அய்யர் பங்களா, கே.கே.நகர் பகுதிகளில் உள்ளன. அதனால், கலைஞர் நூலகம் பணியாளர்கள் தற்போது டீ குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கு 2 கி.மீ., தொலைவில் உள்ள ஹோட்டல், டீ கடைகளுக்கு செல்கின்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு நூலகத்தற்கு திரும்பி வருவதற்கு நேரமாகிறது. அதுபோல், இந்தியா ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்றும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், நூலகத்திற்கு காலை வந்தால் மாலை தான் படித்துவிட்டு செல்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் சாப்பாடு எடுத்து வருவதில்லை. அவர்கள் சாப்பிட நூலக ஊழியர்களை போலவே கே.கே.நகர், அய்யர் பங்களா செல்ல வேண்டிய உள்ளது. படிப்பிற்கு இடையே டீ குடித்து மனதை புத்துணர்ச்சி ஆகலாம்.
ஆனால், அதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு கலைஞர் நூலகத்தில் இல்லை. அதுபோல், நூலகத்தில் பணிபுரிய நிரந்தர ஊழியர்கள் 30 பேரும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் தான் மதுரை மற்றும் அன்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பம், அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த சென்னை அல்லது சொந்த மாவட்டங்களில் இருக்கின்றனர். அதனால், அவர்கள் சாப்பாடு சமைத்து எடுத்து வர முடியாது. அவர்கள் ஹோட்டலுக்கு போய்தான் சாப்பிட வேண்டிய உள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாததால் ஆட்களை மாற்றிவிட்டு செல்ல முடியவில்லை. நூலகம் கட்டி முடிக்கும் போதே, நூலகத்தின் இடது புறத்தில் கேண்டின் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை இந்த கேன்டீனை டெண்டர் விட்டு நடத்துவதற்கு நூலகத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தற்போது இந்த கேன்டீன் கட்டிடம், நூலகத்திற்கு வெளியே ஒரு படிப்பக வளாகமாக மாறியுள்ளது. கேண்டின் உள்ளே மாணவர்கள் அமர்ந்து படிக்கின்றனர். பிரமாண்ட நூலகத்தை கட்டிவிட்டு, அதில் உள்ள கேன்டீனை திறக்காமல் இருப்பது என்ன என்பது தெரியவில்லை. நூலகத்தை முதல்வர் ஜூலை 15ம் தேதி திறந்து வைத்தார். அதனுடன் கட்டிய கேன்டீன் மட்டும், 5 மாதங்களாக திறக்கப்படவில்லை. இது குறித்து நூலகர்களிடம் கேட்டபோது, "பொதுப்பணித் துறை இன்னும் கேன்டீன் கட்டிடத்தை ஒப்படைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஒப்படைத்தப் பிறகே கேன்டீன் திறக்கப்படும்" என்றனர்.