தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு டிராக்டரை பரிசாக வழங்க அன்புமணி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தருமபுரி: ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசாக டிராக்டர் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நேற்று நடைபெற்ற பாமக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெறுவோருக்குப் பரிசாககார் வழங்கப்படும் என அரசு அறிவிக்கிறது. இதனால் விவசாயிக்கு என்ன பயன்? அதற்குப் பதிலாகடிராக்டரை பரிசாக வழங்க வேண்டும். அதேபோல, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தக்க பாதுகாப்புடன் நடத்த வேண்டும்.

பாலக்கோடு பகுதியில் தக்காளிவிளைச்சல் அதிகமாக உள்ளதால், குளிர்பதனக் கிடங்கு அமைத்து, மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

காரிமங்கலத்தில் வேளாண் நிலத்தில் அமர்ந்து மது அருந்திய இளைஞர்களை தட்டிக்கேட்ட நில உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும். வாணியாறு, பஞ்சப்பள்ளி, சேனக்கல், தொப்பையாறு உபரி நீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT