புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம், மீனவ கிராமங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்தனர். தொடர் மழையால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இரு இடங்களில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
புதுச்சேரியில் தொடர் மழை பொழிந்த நிலையில் கடல் சீற்றமாக இருக்கும் என மீன்வளத் துறை ஏற்கனவே எச்சரித்தது மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரியில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கெனவே மீன்பிடிக்க சென்றவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
அனைத்து படகுகளும் தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைத்தனர். நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தனர். குறிப்பாக, நகரத்தின் முக்கிய சாலையான புஸ்சி வீதி, காமராஜ் சாலை, இந்திரா காந்தி சிலை சதுக்கம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதை அகற்ற பணிகள் நடந்தாலும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
கவிழ்ந்த கார்கள்: மழையில் சாலையில் இரு கார்கள் கவிழ்ந்தன. இதில் அனைவரும் உயிர் தப்பினர். புதுச்சேரி கதிர்காமம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின். இவர் மதகடிப்பட்டு பகுதியிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தனது தந்தையின் காரை எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள் நால்வருடன் ஈசிஆரில் சென்றுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அப்பகுதி மக்கள் அனைவரையும் மீட்டனர். லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
புதுச்சேரி நைனார் மண்டபத்தைச் சேர்ந்த அசோக் (42), தனியார் கல்லூரி பேராசிரியர். தனது காரில் திருபுவனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மழைநீரில் சறுக்கி தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. பேராசிரியர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் கார் கவிழ்ந்தபோது ஏர்பேக் வெளியே வந்து உயிர் தப்பினார். கையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு கார்களையும் கிரேன் மூலம் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் கூறுகையில், "தொடர் மழையால் சாலைகள் வழவழப்பாக உள்ளன. கார்கள் சற்று வேகமாக வந்தாலும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது" என்றனர்.