திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மிக் ஜாம் புயல், மிக அதிக கனமழையால், 33 சதவீதத்துக்கு மேல், 50,793 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக அரசு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய நெல் சாகுபடிபருவங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போதைய சம்பா பருவத்தில், சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 387 ஏக்கர்பரப்பளவில் நெற் பயிர்கள் பயிரிடப்பட்டன. அவ்வாறு பயிரிடப்பட்ட நெற்பயிர்களில், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மாததொடக்கத்தில் சுமார் 50 சதவீத நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. மற்ற பகுதிகளில் கதிர் பிடிக்கும் பருவத்தில் இருந்தன. இந்த சம்பா பருவத்தில் வரும் பிப்ரவரியில் முடியும் நெல் அறுவடையின்போது, சுமார் 1.80 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, மிக அதிககன மழையாக கொட்டித் தீர்த்தது. கூடவே மிக் ஜாம் புயல் காரணமாகவும் மழை கொட்டியது. இந்த மழை மற்றும்மிக் ஜாம் புயல் காரணமாக மாவட்டத்தில் உள்ள 1,146 ஏரிகளில் 900-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தன. பூண்டி, புழல், சோழவரம், கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகிய சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட அதிகளவிலான நீர், ஆந்திர மாநிலம்- பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிகளவிலான நீர் மற்றும் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்த மழைநீர் உள்ளிட்டவற்றால் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், பொன்னேரி வட்டத்தில் சில பகுதிகளில் 2 ஆறுகளின் கரைகள்உடைந்தன. மீஞ்சூர் அருகே பிரளயம்பாக்கம் ஏரி, தத்தமஞ்சி உள்ளிட்ட சிலஏரிகளின் கரைகளிலும் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சம்பாநெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. குறிப்பாக பிரளயம்பாக்கம், சோமஞ்சேரி, தத்தைமஞ்சி, வாயலூர், கோளூர், அண்ணாமலைச்சேரி, பெரிய கடம்பூர், தேவம்பட்டு உள்ளிட்ட மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், திருவள்ளூர் மற்றும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வெள்ளியூர், விளாப்பாக்கம், காக்கவாக்கம், தாராட்சி, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி, பூண்டி, சோழவரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
புயல் மற்றும் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில், 63 ஆயிரத்து 185 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளின் முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது.
33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு: இதையடுத்து, கடந்த மாதத்தின் இறுதியில், சுமார் 10 நாட்கள் வருவாய்துறை, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை கள பணியாளர்கள், 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பணியில், 50,793 ஏக்கர்பரப்பளவிலான நெற்பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேல், வடகிழக்கு பருவமழை மற்றும் மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், பள்ளிப்பட்டு, பூண்டி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எண்ணெய் வித்து பயிர்கள் உள்ளிட்ட மற்றவேளாண் பயிர்கள் 2,103 ஏக்கர் பரப்பளவிலும், எல்லாபுரம், வில்லிவாக்கம், சோழவரம், பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் 2,723 ஏக்கர் பரப்பளவிலும் 33 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் பயிர் சேத இறுதிஅறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் பரிசீலனைக்குப் பிறகு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ''திருவள்ளூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரானநிலையிலும், கதிர் பிடிக்கும் பருவத்திலும் இருந்த நெற்பயிர்கள் புயல், மழையால் சேதமடைந்தன. அவ்வாறு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக அரசு வழங்கவேண்டும்'' என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அவர்கள், ஆரணி, கொசஸ்தலை ஆறுகளின் இருபுறமும் கரைகளை பலப்படுத்துவதோடு, தேவையான இடங்களில் தடுப்பணை கட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.