சென்னை: கோயில் பணியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும் என தமிழ்நாடு கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். சங்க காப்பாளர் கண்ணன் மற்றும் மாநிலச் செயலாளர் ரமேஷ், சென்னை கோட்ட தலைவர் தனசேகர், மாநில மகளிர் அணி செயலாளர் செந்தமிழ்ச்செல்வி உட்பட தமிழகம் முழுவதும் இருந்து பல கோயில்களில் பணியாற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கோயில் பணியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் கோயில் பணியாளர்களுக்கும் விடுப்பு சலுகை மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும். கோயில் பணியாளர்களுக்கு, நிலை - 4 செயல் அலுவலர் பணிகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அரசாணையை விரைவில் வழங்க வேண்டும்.
கோயில் அருகிலேயே கோயில்பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டித் தரவேண்டும். சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கோயில் பணியாளர் சங்கத்துக்கு என தனி அலுவலகம் வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை ஆணையர் ஆகியோருக்கு கோரிக்கை மனுவாக நேரில் சந்தித்து வழங்கவும் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.