சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், ரூ.1,933.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.278.97 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 2 பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்கள், திருவள்ளூர்- திருவாலங்காடு ஒன்றியம், தஞ்சாவூர்- கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்கள், கரூர்- அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்கள், ஈரோடு - மொடக்குறிச்சி, கொடுமுடி, தூத்துக்குடி- திருச்செந்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ரூ.1,335.86 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 9.15 லட்சம் மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கத்தை சார்ந்த இந்திரா நகர், மேக்ரோ மார்வெல், சஹாஜ் என்கிளேவ், சேது லட்சுமி நகர், சத்யா நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை, மாதவரம் - லட்சுமிபுரம், மாதவரம் பூஸ்டர், மாதவரம் பேருந்து நிலையம், கூட்டுறவு நகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.
இதுதவிர, நெற்குன்றத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் வழங்கல் திட்டங்கள், ஆலந்தூர் - கண்ணன் காலனியில் கழிவுநீரகற்று நிலையம், அண்ணா நகர் மண்டலம்- வில்லிவாக்கம் பகுதியில் கழிவுநீர் உந்துகுழாய் விரிவாக்கம், ராமாபுரம் பாரதிசாலை, அம்மன் நகரில் பாதாள சாக்கடை, குடிநீர் வழங்கும் திட்டம் என ரூ.204.36 கோடி மதிப்பில், 5.04 லட்சம் மக்கள் பயன்பெறும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், மாநகராட்சி பகுதிகளில் ரூ.52.43 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையங்கள், நகராட்சி பகுதிகளில் ரூ.76.79 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 43 அறிவுசார் மையங்கள், ரூ.14.89 கோடியில் கட்டப்பட்ட 24 நகர்ப்புற சுகாதார நல மையங்கள், 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 ஆய்வக கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், 4.94 கோடியிலான பூங்காக்கள், ரூ.22.48 கோடியில் மேம்படுத்தப்பட்ட 5 சந்தைகள் உள்ளிட்ட ரூ.258.11 கோடி செலவில் முடிவுற்ற 125 பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
இதுதவிர, பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் ரூ.56.94 கோடி மதிப்பிலான 25 முடிவுற்ற பணிகள், சென்னை பெருநகர மாநகராட்சியில் ரூ.78.42 கோடி மதிப்பிலான 40 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ரூ.278.97 கோடி மதிப்பீட்டில் ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி பகுதிகளில் புதிதாக அமைக்கப்படவுள்ள 2 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பணி நியமன ஆணை: குடிநீர் வாரியத்தில் பணிக்காலத்தில் இறந்த 53 பணியாளர்களின் வாரிசுகள், நகராட்சி நிர்வாக இயக்ககத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 68 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் 2022-23-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ரூ.18 கோடியே 61 இலட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, டி.ஆர்.பி. ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.