புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடுதல் போன்றவை ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும்.
ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போலவே, மஞ்சுவிரட்டுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கால்நடைப் பராமரிப்புத் துறையின் உயர் அலுவலர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
காளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்-2017’ உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அவற்றைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், குளம்,கண்மாய்களில் எவ்விதப் பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தாமல் மஞ்சு விரட்டு நடத்தப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், பலர் காயமடைகின்றனர்.
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணிக்குச் சென்ற காவலர் ஒருவரும் உயிரிழந்தார். இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக ஜல்லிக்கட்டுபோலவே, மஞ்சுவிரட்டுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மஞ்சுவிரட்டு நடத்த உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்கு முன்பே www.Jallikattu.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
காளைகள் வரிசைப்படுத்தும் இடம், பரிசோதனை செய்யும் இடம், காளைகள் சேகரிப்பு இடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக் கூடாது. வரைமுறையின்றி காளைகளை அவிழ்த்துவிடுவது கூடாது. அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்டோர் மட்டுமின்றி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஏற்பாட்டாளர்கள் நபருக்கு ரூ.5 லட்சம் வீதம் 20 பார்வையாளர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெறும் வகையில் பிரீமியம் செலுத்தி, காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதியவழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.