தமிழகம்

இயந்திர கோளாறு ஏற்பட்டதால் குவைத் விமானம் ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு குவைத் செல்லும் ஏர்இந்தியா விமானம் புறப்படத் தயாரானது. அதில் 138 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 146 பேர் பயணிக்க இருந்தனர்.

விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சரிபார்த்தனர். அப்போது விமானத்தில் இயந்திரக் கோளாறுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இயந்திரங்களை பழுதுநீக்கும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவு 12 மணி வரை இயந்திரங்களை சரிசெய்ய முடியவில்லை.

இதனால், பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை அமைதிப்படுத்தினர். நேற்று அதிகாலை 1 மணி வரை விமானத்தின் இயந்திரங்களில் பழுதுநீக்கும் பணிமுடியாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை இரவு விமானம் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 138 பயணிகளும் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று இரவு பயணிகளுடன் விமானம் குவைத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

SCROLL FOR NEXT