நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த போரூர் மேம்பாலம் புதிய வடிவமைப்புடன் விரைவில் கட்டப்படவுள்ளது என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு ரோடு, குன்றத்தூர் நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் போரூர் ரவுண்டானா முக்கியமான சாலை சந்திப்பு ஆகும். வடபழனி, குன்றத்தூர், பூந்தமல்லி, கிண்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாகச் செல்கின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாகச் செல்வதால் இங்கு ரூ.34.72 கோடி செலவில், 480 மீட்டர் நீளமும், 37.2 மீட்டர் அகலமும் இருபுறமும் தலா 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
சென்னைப் பெருநகர நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டுமானப் பணி துவங்கியது. இப்பகுதியில் பெரும்பாலான நிலம் பட்டா மற்றும் கிராம நத்தமாக இருப்பதால், இழப்பீடுத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் பட்டா இடங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அந்தப் பகுதி வழியாக செம்பரம்பாக்கத்தில் இருந்து தென் சென்னைக்குச் செல்லும் பெரிய குடிநீர் குழாய்கள் செல்கின்றன. அதை வேறு வழியாக மாற்ற ரூ.5.5 கோடி செலுத்தியும், பணிகளை குடிநீர் வாரியம் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேம்பாலம் கட்டுமானப்பணி முற்றிலும் முடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘இங்கு மேம்பாலம் அமைப்பதாக கூறி, 5 தூண்கள் எழுப்பியுள்ளனர். அதன்பிறகு, என்ன ஆனதோ தெரியவில்லை, கடந்த 2 ஆண்டுகளாக அப்படியேதான் கிடக்கிறது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. அதிக வாகனங்கள் செல்லும்போது, மண், தூசி காற்றில் பறந்து புகைமண்டலம் போல் காட்சி அளிக்கிறது. நடுவில் இந்த தூண்களை அமைக்காமல் இருந்தால் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். இந்த தூண்களே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இந்த பணி முடிந்தபின்பு, பாலம் கட்டுமான இடம் வழியாக செல்லும் குடிநீர் குழாயை மாற்றுவதற்காக சில காலம் பணிகள் தடைபட்டன.
தற்போது மேம்பாலத்தை புதிய வடிவமைப்புடன் கட்டவுள்ளோம். புதிய வடிவமைப்பின்படி குடிநீர் குழாய்களை மாற்றவேண்டிய அவசியம் இருக்காது. எனவே, இத்திட்டத்துக்கான டெண்டர் இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். டெண்டர் இறுதியான நாள் முதல் அடுத்த 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்’’ என்றனர்.