ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் சாக்கடை தூர்வாரிய கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால், சாலையில் கழிவுகள் தேங்கி சேரும் சகதியுமாக மாறியதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக ஆணைய உத்தரவுப்படி, கடந்த மே மாதம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது. தனியார் நிறுவனம் போதிய பணியாளர்களை நியமிக்காததால் சுகாதர பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ஏற்கனவே நகராட்சியில் தூய்மை பணி மேற்கொண்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு தற்காலிக ஏற்பாடாக 11 வார்டுகளில் தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 3 மாதங்களுக்கு மேலாகியும் புதிய ஒப்பந்தம் விடப்பட்டதால், நகராட்சியில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் ராஜாஜி ரோடு, சர்ச் சந்திப்பு, சிவகாசி சாலை, ஊரணிபட்டி தெரு, கீழப்பட்டி தெரு, ரைட்டன்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வரப்பட்டு சாக்கடை கழிவுகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டது. கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால், கனமழையில் சாக்கடை கழிவுகள் அடித்து செல்லப்பட்டு சாலை சேறும் சகதியுமாக மாறியது.
சர்ச் பேருந்து நிறுத்தம் அருகே ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் முன் சாலை முழுவதும் சாக்கடை கழிவுகள் சிதறி கிடந்ததால், நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவியது. ஈரம் காய்ந்த பின் தூசி பறந்து, துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.