புதுச்சேரி: ‘வில்லியனூர் அரசு மருத்துவமனையை ஒரு வாரத்துக்குள் தரம் உயர்த்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்’ என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லாததால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இல்லாத காரணத்தால் கடந்த 3-ம் தேதி சிகிச்சைக்கு வந்த கணுவாய்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி வள்ளி (40) உயிரிழந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ஊர் பிரமுகர்களுடன் சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "புதுச்சேரி நகரத்துக்கு அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் மருத்துவ சேவைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவுபடுத்தப்பட்டு இருந்தாலும், அங்கு போதிய மருத்துவர்கள் இல்லை, ஆம்புலன்ஸுக்கு ஓட்டுநர் இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் சரியாக பணியில் இல்லை. இங்கு தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். ஆனால், வில்லியனூரில் பணியாற்றிய மருத்துவர்களை ஒரே நேரத்தில் மாற்றிவிட்டு அனுபவம் இல்லாத பயிற்சி மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்துள்ளீர்கள்.இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற அஞ்சுகின்றனர்.
இன்னும் ஆம்புலன்ஸுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கவில்லை. போதிய மருந்துகள் இருப்பு இல்லை. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பதிவு சீட்டுக்கூட இல்லாத அவல நிலையில் தொடர்ந்து மருத்துவமனை இயங்குகிறது. ஆண்டுக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகளுக்கு சம்பளம் இல்லை, ஆம்புலன்ஸ் இல்லை, அதற்கு ஓட்டுநர் இல்லை. செவிலியர் பற்றாக்குறை போன்றவற்றால் தினந்தோறும் சிகிச்சைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் இறக்க நேரிடுகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த இயக்குநர் ஸ்ரீராமுலு, "இன்னும் ஒரு வாரத்துக்குள் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படும். தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "ஒரு வாரத்துக்குள் வில்லியனூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்" என்று குறிப்பிட்டார்.