சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்று துறை மற்றும் வரலாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘சிந்து முதல் பொருநை வரை’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம், கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ஆர்.ராமன் தொடங்கிவைத்தார்.
இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: பேராசிரியர் க.துரைசாமி தலைமையில் நடந்த தொடக்க அமர்வில்இந்திய தொல்லியல் நிறுவனத்தின் (ஏஎஸ்ஐ) கீழடி ஆராய்ச்சியா ளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா: வரலாற்றை ஒருபோதும் திரிக்கமுடியாது. ஆனால், அதில் திணிப்புகளை செய்ய முடியும். அந்தவேலையைதான் தற்போது பள்ளி,கல்லூரிகள் மூலம் செய்கின்றனர்.என்சிஇஆர்டி, யுஜிசி ஆகியவை பாடத்திட்டங்களில் மாற்றம் செய்வதை எதிர்த்து போராட வேண்டும்.
பழங்கால நாகரிகங்களை தொடர்புபடுத்தி ஆராயும் ஆர்வம் நம்மிடம் இல்லை. இதனால், பல ஆய்வுகள் முழுமை பெறாத சூழல் உள்ளது. திராவிட நாகரிகத்தில்புதைப்பு முறை உண்டு. ஆரிய நாகரிகத்தில் புதைப்பு முறை இல்லை.
இதை முன்வைத்தே சிந்து சமவெளிநாகரிகம் திராவிட அடிப்படையிலானது என்கிறோம். டிஎன்ஏ ஆய்வுமுடிவும் நமக்கு சாதகமாகவே உள்ளன. ஆனால், பலருக்கு அதை ஏற்க மனமில்லை. எனினும், தொல்லியல் ஆதாரங்களை யாராலும் மறுக்க முடியாது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒடிசா மாநில முதன்மை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன்:கடந்தகால வரலாற்றை காப்பாற்றவேண்டியது அவசியம். புனைவுகளைக் கொண்டு இல்லாமல், அறிவியல் தரவுகளை கொண்டே வரலாறு கட்டமைக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால், கட்டுக்கதை களை கொண்டு வரலாற்றை நிறுவமுயற்சிப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, வரலாற்று பிழை ஏற்படாதவாறு நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள், வரலாற்றில் திரிபுகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. இதை விடுத்து, அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் அவை கவனம் செலுத்த வேண்டும்.
அசோகர் எனும் மன்னர் இருந்ததே 200 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் தெரியாது. அவரை பற்றிமுதலில் வெளிக்கொண்டுவந்தவர் ஜேம்ஸ் பிரின்ஸ்சப் என்ற வெளிநாட்டு அறிஞர்தான். எனவே, வரலாற்றை அறிந்து, அதை காப்பது முக்கியம்.
விளிம்பு நிலை மக்களின்வாழ்க்கை முறை உட்பட அனைத்தையும் உள்ளடக்கியதாக வரலாறுஇருக்க வேண்டும். கீழடியை பொருத்தவரை இன்னும் முழுமையான அம்சங்கள் வெளிவரவில்லை. இவ்வாறு அவர்கள் பேசினர்.
நிகழ்ச்சியில், மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிநினைவாக, அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு ‘கலைஞர் தொல்லியல் விருது’, ஆர்.பாலகிருஷ்ணனுக்கு ‘கலைஞர் திராவிடவியல் விருது’, பேராசிரியர் கருணானந்தனுக்கு ‘கலைஞர் வரலாற்றியல் விருது’ வழங்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக இந்திய வரலாற்று துறை தலைவர் எஸ்.எஸ்.சுந்தரம், மாநிலக் கல்லூரி வரலாற்று துறை இணை பேராசிரியர் ஜி.கே.கிருஷ்ணமூர்த்தி, உதவி பேராசிரியர் வெ.மாறப்பன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.