சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 17 மிமீ மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக ஜனவரி மாதம் பிறந்தாலே மழைப்பொழிவு நின்று, பனிப்பொழிவு தொடங்கிவிடும். ஆனால் தற்போது பனிப்பொழிவு நிகழ்ந்து வரும் நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. நேற்று காலை முதலே வட சென்னை பகுதிகளில் லேசான சாரல் மழைபெய்தது. அதன் பிறகு மாலை 3 மணி அளவில் சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
மாலை 5 மணி வரை நீடித்த மழையால், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்ப காத்திருந்த பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மழைக்காலம் முடிந்ததாக கருதி பொதுமக்கள் யாரும் மழை கோட்டு மற்றும் குடைகளை கொண்டுவராததால், வெளியில் பயணம் மேற்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஒதுங்க இடம் இன்றி, மழையில் நனைந்தனர்.
நேற்று மாலை 5.30 மணிவரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 17 மிமீ, வில்லிவாக்கத்தில் 13 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 6.5 மிமீ, நந்தனத்தில் 6 மிமீ, மீனம்பாக்கத்தில் 4.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.