வேலூர் திருவள்ளுவர் பல்கலை. நுழைவுவாயில் முன்பாக `திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தில்லுமுல்லு' என்ற புத்தகத்துடன் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன் 
தமிழகம்

`திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தில்லுமுல்லு’ புத்தகம்: காவல் துறை அனுமதி மறுத்ததால், நுழைவுவாயில் முன்பு வெளியீடு

செய்திப்பிரிவு

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.300 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக விவரிக்கும் புத்தகத்தை வெளியிட காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், தொழிற்சங்கத்தினர் பல்கலைநுழைவுவாயில் முன்பு புத்தகத்தை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் வழங்கினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.300 கோடி மதிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகதிருவள்ளுவர் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் ‘திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தில்லு முல்லு’ என்ற பெயரில் புத்தகம் தயாரித்துள்ளனர்.

சுமார் 417பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பாக வெளியிட உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்,சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பல்கலை. முன் நேற்று காலைதிரண்டனர். அங்கு வந்த காவலர்களுக்கும், சங்க நிர்வாகிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், நுழைவுவாயில் முன்பு புத்தகத்தை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் வழங்கினர். மேலும், நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று, புத்தகம் வெளியிடப்படும் என்று சங்கத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் ஐ.இளங்கோவன் தெரிவித்தார்.

பதிவாளர் விளக்கம்...: இதுகுறித்து பல்கலை. பதிவாளர் செந்தில்வேல்முருகன் கூறும்போது, ‘‘அவர்கள் கூறிய ஊழல்கள் குறித்த விவரங்கள் எங்களுக்கு வரவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஊழல் நடந்ததாகக் கூறுகிறார்கள். அந்த விவகாரமும் நீதிமன்றத்தில் உள்ளது.அவர்கள் கூறும் பரிந்துரைகளை, நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். சில தகவல்கள் தனிப்பட்டமுறையில் இருப்பதாகத் தெரிகிறது. இது எங்களுக்கும், மாணவர்களுக்கும் மன வருத்தத்தைக் கொடுக்கிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT