தமிழகம்

ராதாபுரம் வட்டாரத்தில் கனமழையால் அழுகிய தக்காளி செடிகள்: விவசாயிகள் கவலை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த தக்காளி செடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் 105 ஹெக்டேரில் தக்காளி, 170 ஹெக்டேரில் கத்தரி, 50 ஹெக்டேரில் வெங்காயம், 136 ஹெக்டேரில் வெண்டை பயிரிட வேளாண்மைத் துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் பணகுடி, பழவூர், ஆவரைகுளம், மாடன்பிள்ளைதர்மம் உள்ளிட்ட ராதாபுரம் வட்டாரத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த வட்டாரத்தில் மழை குறைவாக பெய்வதாலும், நீராதாரங்கள் குறைவு என்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் காய்கறி மற்றும் பூக்கள் சாகுபடியை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த அதி கனமழையால் இந்த வட்டாரத்திலுள்ள வயல்கள் மற்றும் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. பல நாட்களாகியும் வெள்ளம் வடியாத சூழ்நிலையில் பயிர்களின் வேர்கள் அழுகி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பயிரிட்டிருந்த தக்காளி செடிகள் தற்போது தோட்டத்திலேயே அழுகி வருவது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, சேதமடைந்த தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களையும் அரசு கணக்கிட்டு பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதி கனமழையால் பல இடங்களில் தக்காளி செடிகள் அழுகிவிட்டதால் வரும் மாதங்களில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் அதன் விலையும் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

SCROLL FOR NEXT