கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே குண்டும், குழியுமான சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் படப்பள்ளி, வீராச்சி குப்பம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் வேளாண் தொழிலைப் பிரதானமாகச் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் படப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் குப்பம் முதல் வீராச்சிக்குப்பம் வரை சுமார் 3 கிமீ தூரம் வரை தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் சந்தைகளுக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.
இதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் என அனைத்துத் தரப்பு மக்களும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை போதிய பராமரிப்பு இல்லாததால், சாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், ஜல்லிகள் பெயர்ந்துள்ளன. இதனால், இச்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெருமாள் குப்பம் - வீராச்சி குப்பம் இடையேயான சாலை பழுதாகி, குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால், மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் நிலையுள்ளது. மேலும், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகிறது.
இச்சாலையைச் சீரமைக்க கோரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சேதமான சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.