சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திருமணமாகி மூன்று மாதங்களில் குடும்பத் தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அருள் முருகன் ( 27 ). இவருக்கும் சந்திர பிள்ளை வலசு ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் அபிராமி ( 19 ) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய அபிராமி அருகில் இருந்த மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருள் முருகன் மனைவியை காப்பாற்ற அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வாழப் பாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர்.
அப்போது, அபிராமி, அருள் முருகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப் பட்டனர். பின்னர் இருவரது உடலையும் பிரேதப் பரிசோனைக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.