சென்னை: சென்னையில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போலீஸார் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னையில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் காவல் ஆணையர் நேற்று மதியம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு), கபில் குமார் சி.சரத்கர் (தலைமையிடம்), நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் அரவிந்தன், ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு உதவி ஆணையர் விஜயராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறிவுறுத்தல்கள்: குற்றச் செயல்கள் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். விபத்து மற்றும் விபத்து உயிரிழப்பையும் முற்றிலும் தடுக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
மோசடி செய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் இழந்த சொத்துகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் ஆணையர் வழங்கினார்.
மேலும், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம், விஜயகாந்த் இறுதி சடங்கு நிகழ்வு ஆகிய நிகழ்வுகளின்போது போலீஸ் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவும் காவல் ஆணையர் பாராட்டுத் தெரிவித்தார்.